murali vijay century in second test match
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் அசத்தலாக ஆடி சதமடித்தார். இந்திய அணி நிதானமாக ஆடி ரன்களை குவித்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, அஸ்வின், ஜடேஜாவின் சுழல் மற்றும் இஷாந்த் சர்மாவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 205 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, 7 ரன்களில் அவுட்டாகி ராகுல் அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
களத்தில் இருந்த முரளி விஜயும் புஜாராவும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்திய முரளி விஜய், சதமடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளி விஜயின் பத்தாவது சதம் இது. மறுமுனையில் புஜாராவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இலங்கை அணி திணறி வருகிறது.
