வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் மயன்க் அகர்வாலுக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முரளி கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அறிமுகமான பிரித்வி ஷா அபாரமாக ஆடி சதம் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் மயன்க் அகர்வால் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் முதல் போட்டியில் அவருக்கு ஆட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்தியா ஏ அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி நல்ல ஃபார்மில் உள்ளார் மயன்க் அகர்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் 90 ரன்கள் குவித்தார். 

ஆனால் முதல் போட்டியில் பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும் விதமாக அதை மனதில் வைத்துக்கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி தேர்வு அமைந்தது. 

அந்த வகையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக மயன்க் அகர்வாலை சர்வதேச போட்டியில் ஆட வைக்க வேண்டியது அவசியம். எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலை அணியில் ஆட வைக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி அனுபவம் குறைந்த வலுவில்லாத அணியாக உள்ளதால், எப்படியும் இந்திய அணி தான் தொடரை வெல்லும் என்பதால் இரண்டாவது போட்டியில் கோலி ஆட வேண்டிய அவசியம் இல்லை. மயன்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக கோலிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அகர்வாலை ஆட வைக்கலாம் என முரளி கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.