ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், 6—வது வெற்றியைப் பெற்று, 22 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை அணி.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற மும்பை அணி 22 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணி அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்ட மும்பை அணி, 32-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. சுநீல் சேத்ரி கொடுத்த கிராஸில் மத்தியாஸ் டிபெட்ரிகோ இந்த கோலை அடித்தார். இது இந்த சீசனில் அடிக்கப்பட்ட 100-ஆவது கோலாகும்.

37-ஆவது நிமிடத்தில் சென்னை வீரர் ரஃபேல் அகஸ்டோ கோலடிக்க முயன்றார். ஆனால் அவர் உதைத்த பந்து மும்பை கோல் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. இதனால் சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என முன்னிலை பெற்றிருந்த மும்பை அணி 60-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. வலது புறத்தில் இருந்து சகவீரர் கொடுத்த கிராஸை மிக அற்புதமாக கோலாக்கினார் வெடாக்ஸ். இதன்பிறகு 85-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை டேவிட் சுசீ வீணடித்தார்.

89-ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலடிக்கும் வாய்ப்பை மும்பை அணி கோட்டைவிட்டது. இறுதியில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. வெடாக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.