Mumbai is the favorite to win the first defeat for the 2nd aitarapattirku ...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிக்கு முதல் தோல்வியைக் கொடுத்து மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து பேட் செய்த ஐதராபாத் அணியில் ஷிகர் தவனும், கேப்டன் டேவிட் வார்னரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்க தடுமாறினர். இதனால் முதல் 5 ஓவர்களில் அந்த அணி 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

மெக்லீனாகான் வீசிய 7-ஆவது ஓவரில் தவன் இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, ஆட்டம் விறுவிறுப்பானது. இதன்பிறகு அதிரடியில் இறங்கிய வார்னர், ஹார்திக் பாண்டியா ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசினார். தொடர்ந்து வேகம் காட்டிய வார்னர், ஹர்பஜன் சிங் வீசிய 11-ஆவது ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரை எடுத்தனர்.

அடுத்த பந்தில் வார்னர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் மேல் நோக்கி பறந்த பந்தை விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அற்புதமாகப் பிடிக்க, வார்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தீபக் ஹூடா 9 ஓட்டங்களில் அவுட்டாக, ஷிகர் தவன் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ஒட்டங்கள் சேர்த்து மெக்லீனாகான் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங் 7 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் பாண்டியா பந்துவீச்சில் அவுட்டானார்.

இதன்பிறகு வந்தவர்களில் பென் கட்டிங் 10 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் எடுத்தார்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் குவித்தது ஐதராபாத்.

மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணியில் பார்த்திவ் படேல் - ஜோஸ் பட்லர் இணை முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவர்களில் 28 ஓட்டங்கள் சேர்த்தது.

ஜோஸ் பட்லர் 14 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் அவுட்டானர்.

இதையடுத்து வந்த நிதிஷ் ராணா, முஸ்தாபிஜுர் ரஹ்மான் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசினார். அதே ஓவரில் பார்த்திவ் படேல் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட, 6 ஓவர்களில் 61 ஓட்டங்களை எட்டியது மும்பை.

தொடர்ந்து கெத்து காட்டிய பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் சேர்த்து ஹூடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கிரண் போலார்ட் 11 ஓட்டங்களில் வெளியேற, கிருனால் பாண்டியா களம்புகுந்தார்.

ரஷித் கான் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி அதிரடியில் இறங்கிய பாண்டியா, நெஹ்ரா வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டினார்.

தொடர்ந்து அவர், பென் கட்டிங் ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை பறக்கவிட்ட கையோடு, புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் சேர்த்தார்.

அதே ஓவரில் ராணாவும் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

ஹார்திக் பாண்டியா 2, ஹர்பஜன் சிங் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ள மும்பை அணி இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இதுவரை மூன்று ஆட்டங்களில் ஐதரபாத் முதல் முறை இந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.