ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை இரண்டாவது சுற்றில் அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

ஒரு காலத்தில் ஐபிஎல்லில் அதிகமான விலைக்கு ஏலம்போன யுவராஜ் சிங்கை இந்த சீசனில் அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை. அவருக்கு வயதாகிவிட்ட நிலையில், முன்பு போன்ற அதிரடியான ஆட்டத்தை அவரால் ஆடமுடியவில்லை. தற்போதைய சூழலில் ஃபார்மிலும் இல்லை. கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடிய யுவராஜ் சிங், சொல்லும்படியாக ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. 

அதனால் அந்த அணி இந்த சீசனில் யுவராஜை கழட்டிவிட்டது. இந்நிலையில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.1 கோடி என்ற அடிப்படை விலையுடன் ஏலத்தில் விடப்பட்டார். ஆனால் முதல் சுற்று ஏலத்தில் அவரை அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை. யுவராஜ் சிங்கை அனைத்து அணிகளும் புறக்கணித்தது ஆச்சரியமாகவே இருந்தது. 

எனினும் இரண்டாவது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு எடுத்தது. இதையடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இணைகிறார். அனுபவ வீரர்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததால் யுவராஜ் சிங்கை எடுத்ததாகவும் யுவராஜ் மற்றும் மலிங்காவை அவர்களது அடிப்படை விலைக்கே எடுத்தது பெரிய விஷயம் என்றும் அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை கடந்த சீசனில் இருந்தது. எனவே அதற்கு தீர்வாக யுவராஜ் சிங்கை பயன்படுத்த அந்த அணி முனையும். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டதும் அதுகுறித்து டுவீட் செய்துள்ள யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவது மகிழ்ச்சி. அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறேன். விரைவில் சந்திப்போம் ரோஹித் என்று டுவீட் செய்துள்ளார் யுவராஜ்.