Mumbai Indians beat Rising Pune Supergiant
ஐ.பி.எல். 10 ஆவது சீசனின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக சிமென்ஸ் மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆகியோர் களமிறங்கினர்.
சிக்ஸர்களும் பவுண்டரிகளும் வெளுக்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மும்பை ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

சிமென்ஸ் 3 ரன்னிலும், பார்த்திவ் பட்டேல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்த்த அம்பத்தி ரய்டுவும், ரோகித் சர்மாவும் சோபிக்கத் தவறிவிட்டனர். ரய்டு ரன் அவுட் ஆகி வெளியேற ரோகித் சர்மாவோ, சாம்பா பந்துவீச்சில் தாக்கூரிடம் கேட்ச்சாகி நடையைக் கட்டினார்.

கிரன் பொல்லார்டு, ஹார்திக் பாண்டியா, கரன் சர்மா, மிட்செல் ஜான்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். குர்னல் பாண்டியா மட்டும் நிலைத்து நி்ன்று ஆடி 47 ரன்களை குவித்து அணி கவுரவமான ரன் எடுக்க உதவினார்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. புனே அணி சார்பில் ஜாதவ் யுதன்கட், ஆடம் சாம்பா, டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களத்தில் குதித்த புனே அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.புனே அணியை பொறுத்தவரை அஜின்கிய ரஹானே, ஸ்டீவன் ஸ்மித் மட்டுமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஸ்மித் அரைசதம் விளாசினார். இறுதி பந்தில் 4 ரன் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் புனே அணியால் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இதன் மூலம் ஐ.பி.எல்.தொடரில் மூன்று முறை பட்டத்தை வென்ற அணி என்ற சாதனையையும் மும்பை அணி பெற்றது. குர்னல் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார். 10 ஆவது சீசனின் கோப்பையை பெற்ற மும்பை அணிக்கு முதல் பரிசாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
