சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) 2017-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் கல்வி ஆணையம் மற்றும் ஒலிம்பிக் தொலைக்காட்சி சேனல் ஆணையம் ஆகிய இரண்டு ஆணையங்களுக்கான உறுப்பினராக நீதா அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கீழ் 26 ஆணையங்கள் இயங்குகின்றன. அவற்றில் 2017-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் கல்வி ஆணையம் மற்றும் ஒலிம்பிக் தொலைக்காட்சி சேனல் ஆணையம் ஆகியவற்றின் உறுப்பினராக நீதா அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதில், அமெரிக்க ஒலிம்பிக் சங்கத் தலைவர் லாரன்ஸ் ஃபிரான்சிஸ் பிரோப்ஸ்ட் தலைமையிலான ஒலிம்பிக் சேனல் குழுவில் நீதா அம்பானியுடன் சேர்த்து 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

அந்த ஆணையத்தில் உறுப்பினராக இருந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பிலிப் கிரேவனுக்கு பதிலாக, தற்போது நீதா அம்பானி உறுப்பினராக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

52 வயதாகும் நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி ஆவார். இவர், ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட, ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இவரது பெயர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இடம்பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையப் பெற்றுள்ள நீதா அம்பானி, தற்போது அந்த கமிட்டியின் முக்கிய இரு ஆணையங்களின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தனது 70-ஆவது வயது வரையில் நீடிப்பார்.