mujeeb ut rahman learnt spin bowling tactic from ashwin
அஷ்வினிடம் கற்றுக்கொண்ட ஸ்பின் நுணுக்கங்களையும் தந்திரங்களையும் இந்திய அணிக்கு எதிராக பயன்படுத்தி நெருக்கடி கொடுப்பேன் என ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னர் மூஜீபுர் ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி, வரும் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்திய அணியுடன் மோதுகிறது. அதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், அவர்களை போட்டி சவாலானதாக இருக்கும். உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், ஆஃப்கானிஸ்தான் அணி நம்பிக்கையுடனும் மன வலிமையுடனும் இந்திய அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான், ஐபிஎல்லில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் ஆடினார். அப்போது பயிற்சி மற்றும் போட்டி சமயங்களில் முஜீபுர் ரஹ்மானுக்கு ஸ்பின் நுணுக்கங்களை அஷ்வின் கற்றுக்கொடுத்திருக்கிறார். பல இளம் வீரர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள சிறந்த களமாக அமைந்த ஐபிஎல், முஜீபுர் ரஹ்மானுக்கும் அவரது திறமையை வளர்த்துக்கொள்ள உதவியுள்ளது. அஷ்வினிடம் கற்றுக்கொண்ட நுணுக்கங்களை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தி நெருக்கடி கொடுக்கப்போவதாக முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்பாக பேசிய முஜீபுர் ரஹ்மான், பஞ்சாப் அணியில் இருந்தபோது, பயிற்சியின் போது பெரும்பாலான நேரத்தை அஷ்வினுடன் செலவிட்டேன். மிகவும் பயனுள்ள அறிவுரைகளையும் பவுலிங் நுணுக்கங்களையும் அஷ்வின் வழங்கினார். அவையனைத்தும் என்னை வளர்த்துக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தன.
எந்த இடத்தில் பந்து வீசினால் பேட்ஸ்மேன் திணறுவார், புதிய பந்தில் எப்படி வீசுவது, பந்து தேய்ந்துவிட்டால் எப்படிச் சுழல விடுவது போன்ற பல்வேறு உத்திகளை அஷ்வினிடம் கற்றேன்.
இதுவரை உள்நாட்டு முதல்தரப் போட்டிகளில் நான் விளையாடாவில்லை என்றாலும் கூட, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடி இருக்கிறேன். ஐபிஎல் போட்டி பயத்தை போக்கிவிட்டது. அதனால் எனக்கு எந்தவிதமான பயமும் இல்லை. டெஸ்ட் போட்டி குறித்தோ எந்த அணியுடன் ஆடுகிறோம் என்பது குறித்தோ எந்தவிதமான பயமும் எனக்கு இல்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
