இந்திய அணியில் தற்போது இருக்கும் வீரர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் அவற்றை பயன்படுத்தி சிறப்பாக ஆடத்தவறினால் அதிரடியாக நீக்கப்பட்டுவிட்டு உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-4 என இழந்தது. இந்த தொடரில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக மாறிவிட்டது. ஆனால் பேட்டிங்கில் தொடர்ந்து வீரர்கள் சொதப்பிவருகின்றனர். பேட்டிங்கில் சொதப்பியதால்தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. 

இங்கிலாந்து தொடரில் கேப்டன் விராட் கோலி, புஜாராவைத் தவிர மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. ரஹானே அவ்வப்போது சில நல்ல இன்னிங்ஸ்களை ஆடினார். ராகுல் கடைசி போட்டியில் மிரட்டலாக ஆடினார். ரிஷப் பண்ட் ஓரளவிற்கு ஆடினார். கடைசி போட்டியின் இன்னிங்ஸில் ராகுலுடன் இவரும் சதமடித்தார். மற்றபடி மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. 

இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பிவருகிறது. ஒருநாள் போட்டிகளிலும் மிடில் ஆர்டர் தேடல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இங்கிலாந்து தொடரில் சாதகமான மற்றும் பாதகமான விஷயங்கள் என இரண்டுமே நடந்துள்ளன. இங்கிலாந்து தொடரில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முன்வரிசை பேட்ஸ்மேன்களை விரைவில் வீழ்த்தியபோதிலும், பின்வரிசை வீரர்களை நீண்டநேரம் களத்தில் ஆடவிட்டனர். அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். 

இங்கிலாந்து சூழலில் ஆடுவது கடினம். எனினும் அந்த அணியின் தொடக்க வீரர்களை விட நமது தொடக்க வீரர்கள் நன்றாகத்தான் ஆடினார்கள். பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அனைத்து வீரர்களுக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படும். அவற்றை பயன்படுத்தி வீரர்கள் சிறப்பாக ஆடாவிட்டால், உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படும். 

அடுத்து வரஉள்ள ஆஸ்திரேலியத் தொடர் மிகவும் முக்கியமானது. பந்துவீச்சில் இந்திய அணி பலம் பொருந்தியதாக மாறிவிட்டது. ஆனால், பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன்பாக 24 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால், பேட்டிங்கை வலுப்படுத்துவது அவசியம் என எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.