உலக கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்யும் பணிகளை 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகே தொடங்கிவிட்டதாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி 1983 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றுள்ளது. 1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. மீண்டும் 2015ம் ஆண்டு உலக கோப்பையிலும் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி, அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி வெளியேறியது. 

இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி, இந்த முறை இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பையை கோலி தலைமையில் வெல்லும் தீவிரத்தில் உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்து வருகிறது. சர்வதேச அளவில் அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. 

இந்த முறை உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி உள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். அதில் ஒருசில மாற்றங்கள் இருக்கலாம். உலக கோப்பைக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில், உலக கோப்பை தயாரிப்பு குறித்து பேசியுள்ள தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உலக கோப்பைக்கான திட்டமிடல்கள் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகே தொடங்கிவிட்டன. இந்திய அணியில் இருக்கும் நிறை குறைகளை ஆராய்ந்து, குறைகளை களையும் முயற்சிகளும் பணிகளும் அப்போதே தொடங்கிவிட்டன. தற்போதைய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், எவ்வளவு கடினமான இலக்கையும் விரட்டக்கூடிய திறன்மிக்கது என்று நான் நம்புகிறேன். அனுபவமும் இளமையும் கலந்த அணியாக நாம் இருக்கிறோம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தக்கூடிய ஹர்திக் பாண்டியா, அணிக்கு கண்டிப்பாக கூடுதல் வலு சேர்ப்பார் என்று எம்.எஸ்.கே.பிரசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.