Mourning the death of Prime Minister Akhilesh

இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் அகிலேஷின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, “அகிலேஷின் மறைவு பெரும் துயரத்தை தந்துள்ளது. பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணிகளை ஒருபோதும் மறக்க முடியாது” என இரங்கல் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் வசித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இந்திய பாட்மிண்டன் சங்க (பாய்) தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தாவுக்கு (56) நேற்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் லாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் இழப்பால் அவரது மனைவி, மகள், மகன் ஆகியோர் வாடினர்.

2012-ல் இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்ட அகிலேஷ், 2014-ல் நடைபெற்ற தேர்தலில் ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆசிய பாட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைவராக வந்த பிறகுதான் தாமஸ்/உபெர் கோப்பை, சூப்பர் சீரிஸ், சையது மோடி கிராண்ட்ப்ரீ போட்டி போன்றவற்றை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது.

அகிலேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அகிலேஷின் மறைவு பெரும் துயரத்தை தந்துள்ளது. பொது வாழ்க்கையில் அவர் ஆற்றிய பணிகளை ஒருபோதும் மறக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், இந்திய பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, பாட்மிண்டன் வீரர் காஷ்யப், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பாட்மிண்டன் சங்கம் உள்பட ஏராளமான விளையாட்டு அமைப்புகள் அகிலேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.