இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

அதிலும் அண்மைக்காலமாக டி20 போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில் சேர்க்கப்படவில்லை. எனவே ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். மற்ற போட்டிகளில் ஆடுவதேயில்லை. அதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகே போட்டிகளில் ஆடிவருகிறார். ஏற்கனவே ஃபார்மில்லாமல் தவித்துவரும் தோனி, குறைவான போட்டிகளில்தான் ஆடிவருகிறார். 

ஆனால் அவர் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையில் ஆட இருப்பதால், அதற்குள் ஃபார்முக்கு வந்து சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். எனவே பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் விதமாக விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும். அதன்மூலம் பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கலாம். அது அவரது பேட்டிங் மேம்பட உதவும் என்று ஏற்கனவே கவாஸ்கர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் கவாஸ்கரின் பேச்சை சற்றும் மதிக்காத தோனி, விஜய் ஹசாரே தொடரில் ஆடவில்லை. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட்  அணிகளில் இல்லாத தோனி, சுமார் இரண்டரை மாதமாக சும்மாவே இருந்துவிட்டு அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு நேராக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடினால் அவரால் எப்படி நன்றாக ஆட முடியும்? கண்டிப்பாக ஆட முடியாது.

ஆனால் ஒருநாள் அணியில் அவருக்கான இடம் நிரந்தரமாக இருக்கிறது என்பதால் அவர், அலட்சியமாக இருந்துவிட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாலியாக ஒருநாள் அணியில் இடம்பெற்று ஆடுவார். அவருக்காக மற்ற வீரர்கள் வழிவிட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு தொடர் பயிற்சி அவசியம். விளையாண்டு கொண்டே இருந்தால்தான் ஃபார்மில் இருக்க முடியும். ஆனால் தோனி உள்நாட்டு போட்டியில் ஆடுவதை தவிர்த்துவருகிறார். உள்நாட்டு போட்டிகளில் ஆடி ஃபார்முக்கு வருவதை விடுத்து, வீட்டில் மகளுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். 

சீனியர் வீரர், அனுபவ வீரர் என்பதையெல்லாம் கடந்து சர்வதேச அணியில் ஆடும் வீரர், நல்ல ஃபார்மில் ஆடவேண்டும் என்பதுதான் அவசியம். ஆனால் தோனி என்பதற்காக மட்டுமே அவர் அணியில் நிரந்தர இடம் பிடித்துவிடுகிறார். இது வளர்ந்துவரும் இளம் வீரர்களுக்கு தடையாக இருக்கிறது. அவர் நன்றாக ஆடினால் அவரை யாருமே கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் சரியாக ஆடாத பட்சத்தில், சீனியர் வீரராக இருந்தாலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உள்நாட்டு போட்டிகளை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை. ஆனால் அதை செய்ய தோனி மறுக்கிறார்.

தோனி உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ஆனால் தோனி இதுபோன்ற ஆலோசனைகளை எல்லாம் மதிப்பதே இல்லை. 

இந்நிலையில், கவாஸ்கரை போன்றே முன்னாள் வீரர் மோஹிந்தர் அமர்நாத்தும் தோனி மட்டுமல்லாமல் எந்த சீனியர் வீரராக இருந்தாலும் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மோஹிந்தர் அமர்நாத், இந்திய அணிக்காக ஆட வேண்டுமென்றால், எந்த வீரராக இருந்தாலும் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும். இதுகுறித்து பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வீரர் கடந்த காலத்தில் எவ்வளவு சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்திருந்தாலும், இப்போதைக்கு ஃபார்மில் இருப்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஃபார்மட் போட்டியில் மட்டுமே ஆடினாலும் உள்நாட்டு போட்டிகளில் ஆடி அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும் அனுபவத்தை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமானால் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று மோஹிந்தர் அமர்நாத் வலியுறுத்தியுள்ளார்.