விளையாட்டுத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக மாற்ற, தனியார் துறைகளில் இருந்தும் ஆதரவு வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரலில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

இந்த நிலையில் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் ரத்தோர், "இந்தியாவை விளையாட்டுச் சாதனங்களுக்கான உற்பத்திக் கூடமாக மாற்ற விரும்புகிறோம். அதற்காக நாட்டின் கொள்கைகளில் எந்த விதமான மாற்றங்களை எப்படி மேற்கொள்வது என்பதை விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்தியா மற்றும் உலகில் உள்ள சிறந்த விளையாட்டுச் சாதன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விளையாட்டுத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற்றதாக மாற்ற, தனியார் துறைகளில் இருந்தும் ஆதரவு வேண்டும்.

விளையாட்டின் மேம்பாட்டுக்காக தற்போது பதக்க வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியல், விளையாடு இந்தியா போட்டிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவில் 2018-ஆம் ஆண்டானது, விளையாட்டுத் துறைக்கான ஆண்டாகும். விளையாட்டை நோக்கிய மக்களின் பார்வையை மாற்ற முனைந்துள்ளோம். அதற்கு முதலில் விளையாட்டைச் சுற்றியுள்ள சூழல்கள் மாற்றப்பட வேண்டும்.

இதில் உற்பத்தி, கல்வி, திறன் பயிற்சி, விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஒளிபரப்பு, நிகழ்வுகள், அகாதெமிகளை நிர்வகித்தல் என அனைத்தும் அடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.