தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. மேலும் நேற்று நடந்த ஒரே ஒரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

மழை காரணமாக 10 ஓவராக குறைக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 108 ரன்களை குவித்தது. 109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 87 ரன்களை மட்டுமே எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பொதுவாகவே ஃபீல்டிங்கில் மிரட்டுபவரான ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், நேற்றைய போட்டியிலும் மிரட்டலான கேட்ச் ஒன்றை பிடித்தார். தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கின்போது ஸ்டேன்லேக் 7வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் தூக்கி அடிக்க பந்து சிக்ஸருக்கு சென்ற பந்தை பாய்ந்து பிடித்த மேக்ஸ்வேல், பவுண்டரி லைனுக்குள் நுழைய நேர்ந்ததால் பந்தை தூக்கி போட்டு விட்டு மீண்டும் லைனுக்கு வெளியே வந்து கேட்ச் செய்தார். மேக்ஸ்வெல் இதேபோன்று பல கேட்ச்களை பிடித்துள்ளார். இந்த கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.