2 கிரிக்கெட் மேதைகளின் கலவைதான் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்துள்ளார்.

இந்திய அணிக்கு பல இளம் திறமைகள் கிடைத்து கொண்டிருக்கின்றன. ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, மயன்க் அகர்வால் என மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் கிடைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நேற்று ராஜ்கோட்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆட பிரித்வி ஷா வாய்ப்பு பெற்றார். இதுதான் இந்திய அணிக்காக அவர் ஆடும் முதல் சர்வதேச போட்டி. 

அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே சதமடித்ததன் மூலம், இளம் வயதில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த வீரர்களில் நான்காவது இடத்தை பிடித்தார் பிரித்வி ஷா. 134 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. களமிறங்கியது முதலே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பவுண்டரிகளுக்கு விரட்டிக்கொண்டே இருந்தார். குறிப்பாக பேக்ஃபூட் ஷாட்களை அபாரமாக ஆடினார். 

இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபார சதமடித்த பிரித்வி ஷா பாராட்டு மழையில் நனைந்துவருகிறார். பிரித்வி ஷாவின் ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினர்.

பிரித்வி ஷாவை பாராட்டி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இந்தியாவிற்கு மற்றொரு சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார் என்று புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் பதிவிட்ட டுவீட்டில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என பிரித்வியை புகழ்ந்துள்ளார்.