Asianet News TamilAsianet News Tamil

ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்சை சொதப்பிய மனீஷ் பாண்டே!! இந்த லெட்சணத்துல ஆடுனா எப்படி டீம்ல இடம் கிடைக்கும்..?

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் இந்திய அணியின் சொதப்பலால் ஆட்டத்தின் கடைசி பந்து வரை போட்டி சென்றது. 
 

manish pandey failed to prove his talent
Author
India, First Published Nov 12, 2018, 9:51 AM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் இந்திய அணியின் சொதப்பலால் ஆட்டத்தின் கடைசி பந்து வரை போட்டி சென்றது. 

வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்றது இந்திய அணி. முதலிரண்டு போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்று கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நிகோலஸ் பூரானின் கடைசிக்கட்ட அதிரடியால் 20 ஓவர் முடிவில் 181 ரன்களை குவித்தது. 

182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் தவானும் ரிஷப் பண்ட்டும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தது. 18 ஓவருக்கே 174 ரன்களை எட்டிவிட்டது இந்திய அணி. இதையடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 58 ரன்களில் ஆட்டமிழந்தார் ரிஷப் பண்ட். 18வது ஓவரின் முதல் பந்தில் தவான் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ரிஷப் பண்ட் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய மனீஷ் பாண்டே, எஞ்சிய நான்கு பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

manish pandey failed to prove his talent

அதனால் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்த தவான், இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் மனீஷ் பாண்டே ஒரு ரன் எடுத்தார். நான்காவது பந்து டாட் பால், ஐந்தாவது பந்தில் தவான் அவுட்டாக ஆட்டம் பரபரப்பானது. அதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை மனீஷ் பாண்டே எதிர்கொண்டார். அதையாவது நன்றாக அடித்து சிங்கிள் ஓடினாரா என்றால் கிடையாது. எப்படியாவது பந்தை தட்டிவிட்டால் போதும் என்ற நினைப்பில் பவுலருக்கு நேராக அடித்துவிட்டு தட்டுத்தடுமாறி ஓடி அந்த ஒரு ரன்னை எடுத்தார். பவுலரோ மற்ற ஃபீல்டர்களோ தவறு செய்யாமல் அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்திருந்தால் போட்டி டிரா ஆகியிருக்கும். 

நெருக்கடியே இல்லாமல் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் கடைசி நேரத்தில் பந்துகளை வீணடித்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் பாண்டே. இதற்கு முன்னும் கிடைத்த பல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாததால்தான் மனீஷ் பாண்டே ஓரங்கட்டப்பட்டிருந்தார். நேற்றைய போட்டியில் மீண்டும் சொதப்பிவிட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios