மான்செஸ்டர்,

3-1 என்ற கோல் கணக்கில், மெஸ்சி இருக்கும் பார்சிலோனா அணிக்கு ஆட்டம் காட்டியது மான்செஸ்டர் சிட்டி அணி.

கிளப் அணிகளுக்கான 62–வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 கிளப் அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதுகின்றன.

இந்த நிலையில் ‘சி’ பிரிவில் மான்செஸ்டரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த லயோனல் மெஸ்சி, நெய்மார், லூயிஸ் சுவாரஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய பார்சிலோனா கிளப், மான்செஸ்டர் சிட்டியுடன் (இங்கிலாந்து) மோதியது.

இதில் மான்செஸ்டர் சிட்டி 3–1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இகாய் குன்டோகன் (2 கோல்), கெவின் டி புருனே (51–வது நிமிடம்) அந்த அணியில் கோல் அடித்தனர்.

பார்சிலோனா அணியில் மெஸ்சி 21–வது நிமிடத்தில் கோல் போட்டார். பார்சிலோனாவிடம் அவர்களது இடத்தில் 0–4 என்ற கணக்கில் தோற்றிருந்த மான்செஸ்டர் சிட்டி அணி தற்போது தங்களது ஊரில் ஆட்டம் காட்டியுள்ளது.

சி பிரிவில் பார்சிலோனா 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மான்செஸ்டர் 7 புள்ளிகளுடன் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா) 2–வது இடத்திலும் உள்ளன