பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆட்டநாயகன், தொடர்நாயகன் என இரு விருதுகளையும் சென்றார்

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

அந்த அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 179 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 128 ஓட்டங்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41.3 ஓவர்களில் 284 ஓட்டங்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஆஸ்திரேலியாவின் ஒரு ஜோடி குவித்த அதிகபட்ச ஓட்டங்களாகும். அதேநேரத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க ஜோடி ஒன்றால் எடுக்கப்பட்ட 2-ஆவது அதிகபட்ச ஓட்டங்களாகும்.

இலங்கையின் ஜெயசூர்யா - உபுல்தரங்கா ஜோடி 2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக 286 ஓட்டங்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆட, டேவிட் வார்னர் வெளுத்து வாங்கினார். 34 பந்துகளில் அரை சதம் கண்ட வார்னர், 78 பந்துகளில் சதத்தை எட்டினார்.

இதனால் 31-ஆவது ஓவரில் 200 ஓட்டங்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து வேகம் காட்டிய வார்னர் 107 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார்.

மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த டிராவிஸ் ஹெட் 121 பந்துகளில் சதத்தை எட்டினார். இது, ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதமாகும்.

ஆஸ்திரேலியா 41.3 ஓவர்களில் 284 ஓட்டங்களை எட்டியபோது வார்னரின் விக்கெட்டை இழந்தது. இரட்டைச் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 128 பந்துகளில் 5 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 179 ஓட்டங்கள் குவித்து ஜுனைத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 4, மேக்ஸ்வெல் 13, மேத்யூ வேட் 8 என அடுத்தடுத்து வெளியேற, டிராவிஸ் ஹெட் 137 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 369 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது ஆஸ்திரேலியா.

பாகிஸ்தான் தரப்பில் ஜுனைத் கான், ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் அசார் அலி 6 ஓட்டங்களில் நடையைக் கட்ட, ஷர்ஜீல் கானுடன் இணைந்தார் பாபர் ஆஸம். இந்த ஜோடி 22 ஓவர்களில் 130 ஓட்டங்கள் குவித்தது. ஷர்ஜீல் கான் 79 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த முகமது ஹபீஸ் 3 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷோயிப் மாலிக் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் தனிநபராக போராடிய பாபர் ஆஸம் 109 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் உமர் அக்மல் மட்டுமே 46 ரன்கள் ஓட்டங்கள் (40 பந்துகளில்) எடுத்தார். எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேற, 49.1 ஓவர்களில் 312 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.