முன்னாள் கேப்டனான தோனியுடன் இணைந்து விளையாடியது என்னை மேலும் முதிர்ச்சியான வீரராக மாற்றியுள்ளது என இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
முதல் போட்டியில் அதிரடியாக ஆடி 76 பந்துகளில் 120 ஒட்டங்கள் எடுத்துச் சதமடித்த இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேதார் ஜாதவ், 3-ஆவது போட்டியில் 75 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்தது.
இந்த நிலையில் அவர் கூறியதாவது:
“புனேவில் நடைபெற்ற முதல் போட்டியில் சதமடித்த பிறகு, இதேபோன்று வரும் போட்டிகளிலும் சிறப்பாக ஆடினால் தொடர் நாயகன் விருதை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் எனது வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன்.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து தொடரில் நான் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கவில்லை. ஆனால் அதில் நான் ஆடியவிதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதனால் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடி ஓட்டங்கள் குவிக்க முடியும் என்ற துணிச்சலான நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டது. எந்தவொரு வீரருக்குமே துணிச்சலான எண்ணம் மிக முக்கியமானதாகும்.
இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தாமதமாகத்தான் பெற்றிருக்கிறேன். அதற்கு காரணம், எனது ஆட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தன. நான் முதிர்ச்சியான வீரராக உருவெடுத்தபோது இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்தி சாதித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
கேப்டன் கோலி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். எனது இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு என்னை ஊக்கப்படுத்துகிறார். அவர் ஒரு போட்டிக்காக தயாராவதையும், ஒரு போட்டியில் விளையாடுவதையும் பார்க்கும்போது மிகப்பெரிய உத்வேகம் கிடைக்கிறது.
முன்னாள் கேப்டனான தோனியுடன் இணைந்து விளையாடியது என்னை மேலும் முதிர்ச்சியான வீரராக மாற்றியுள்ளது. அவர் நெருக்கடியான சூழல்களையும், சவாலையும் அமைதியாக கையாளுகிறார்.
நான் நிகழ்காலத்தை நம்புகிறேன். கடந்த காலங்களில் சந்தித்த வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனினும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் மேலும் இரண்டு அல்லது 3 தொடர்களில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்” என்றுத் தெரிவித்தார்..
