Lost 4 times pospisili record fifth time beating Murray
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் வசேக் போஸ்பிஸிலிடம் தோல்வி அடைந்தார். போஸ்பிஸிலி, முர்ரேவிடம் 4 முறை தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் விளையாடும் வாய்ப்பை முர்ரே பெற்றிருந்தார்.
அந்த போட்டியில் 4-6, 6-7 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் வசேக் போஸ்பிஸிலிடம் முர்ரே தோல்வி அடைந்தார்.
போஸ்பிஸில் தனது வாழ்நாளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். 2014-இல் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ஜேக் சாக்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதே இன்றளவிலும் போஸ்பிஸிலின் சாதனையாகும்.
இதற்கு முன்னர் போஸ்பிஸிலுடன் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த முர்ரே, முதல்முறையாக அவரிடம் தோல்வி கண்டுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய போஸ்பிஸில், "இந்த வெற்றியால் அற்புதமான உணர்வு எனக்குள் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறேன்' என்றார்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான ஆண்ட்ரியா பெட்கோவிக்கை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் கெர்பர், 58 நிமிடங்களில் இந்த ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
வெற்றி குறித்துப் பேசிய கெர்பர், "பெட்கோவிக்கிற்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்கள். பெட்கோவிக்கிற்கு எதிராக விளையாடுவது எப்போதுமே சவாலானதாகும்' என்றார்.
