பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் நீக்கப்பட்டனர். இந்நிலையில், பயிற்சியாளர் லீமெனும் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியில் தினம் தினம் திருப்பங்களும் அதிரடி அறிவிப்புகளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த கேப்டன் ஸ்மித், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

மேலும் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக இருந்த லீமென் மீது மட்டும் நடவடிக்கைகள் பாயவில்லை. பந்தை சேதப்படுத்த வீரர்கள் வகுத்த திட்டம் லீமெனுக்கு தெரியாது. அதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளதால்தான் லீமென் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனாலும் களத்தில் வீரர்களின் நடத்தை குறித்தும் அவற்றில் லீமெனின் பங்கு குறித்தும் அவரிடம் மீண்டும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வந்தன.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டி முடிந்ததும், தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக லீமென் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லீமென், வீரர்கள் பெரும் தவறு செய்துவிட்டனர். அதற்காக அவர்கள் மோசமானவர்கள் இல்லை. அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என லீமென் தெரிவித்துள்ளார்.