இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த விவிஎஸ் லட்சுமணன், தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர் யார் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து, இந்திய அணிக்கு பல இக்கட்டான சூழல்களில் அவற்றிலிருந்து மீட்டெடுத்து வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். இந்திய அணிக்கு லட்சுமணன் அளித்த பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறந்த பல இன்னிங்ஸ்கள் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்தவர். 

நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் வல்லவர் லட்சுமணன். இந்திய அணிக்காக 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள லட்சுமணன், 17 சதங்கள் மற்றும் 56 அரைசதங்களுடன் 8781 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக 16 ஆண்டுகாலம் ஆடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்ட லட்சுமணன், தோல்வியின் விளிம்புவரை சென்ற பல போட்டிகளில் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தவர். 

வாசிம் அக்ரம், மெக்ராத், ஷேன் வார்னே, முரளிதரன், சமிந்தா வாஸ் போன்ற பவுலிங் மேதைகளின் பந்துகளை அபாரமாக எதிர்கொண்டு ஆடியவர். இவர் ஆடிய காலக்கட்டத்தில் பல சிறந்த மற்றும் அபாயகரமான பவுலர்கள் இருந்தனர். அவர்களின் பவுலிங்கை எல்லாம் அசாத்தியமாக எதிர்கொண்டு ஆடியவர் லட்சுமணன். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2001ம் ஆண்டில் கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் அவர் அடித்த 281 ரன்கள் தான் அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த பெயரிலேயே அவரது சுயசரிதை புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எந்த பவுலர் தனக்கு மிகவும் டஃப் கொடுத்தவர் என்பதை பகிர்ந்துள்ளார் லட்சுமணன். இதுகுறித்து பேசிய லட்சுமணன், வாசிம் அக்ரம்தான் தான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பவுலர் என லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

வாசிம் அக்ரம் மிகச்சிறந்த ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் என ஸ்விங்கில் மிரட்டியவர். எல்லா காலத்திலும் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் தான் என்றால் மிகையாகாது.