இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவருமே தொடர்ந்து சொதப்பிவந்தனர். இங்கிலாந்தில் முதலிரண்டு போட்டிகளில் சேர்த்தே முரளி விஜய் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார். 

முரளி விஜய் நீக்கப்பட்டாலும், சரியாக ஆடாத ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ராகுலின் பேட்டிங்கின் மீதும் அவரது திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள தவறிய ராகுல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. அவர் சரியாக ஆடாதது ஒருபுறமிருக்க, அவரது உடல்மொழியே அவர் நம்பிக்கை இழந்திருந்ததை காட்டியது. 

தொடக்க வீரர்களின் சொதப்பல் தொடர்ந்தால், அது அணிக்கு பாதிப்பாக அமையும் என்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டு மயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

ரோஹித் சர்மா அணியில் எடுக்கப்பட்ட போதும் நல்ல பேட்டிங் டெக்னிக்கை பெற்றுள்ள ஹனுமா விஹாரியை அகர்வாலுடன் தொடக்க வீரராக இறக்க இந்திய அணி திட்டமிட்டு, அவரையே இறக்கியது. அவர் முதல் தர கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. அவர் மிடில் ஆர்டர் வீரர். எனவே அவருக்கு தொடக்க வீரர் என்ற ரோல் முற்றிலும் புதிதானது. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக புதிதாக ஒரு ரோலை ஏற்று செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல. 

எனினும் அகர்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி, மிகவும் நிதானமாகவே தொடங்கினார். 66 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எதிர்பார்த்த அளவிற்கு விஹாரி சோபிக்கவில்லை. புதிய ரோலை ஏற்ற முதல் போட்டியிலேயே பெரியளவில் சோபிக்கமுடியாது என்பது அணி நிர்வாகத்துக்கும் தேர்வாளர்களுக்கும் தெரியும் என்பதால் பாதிப்பில்லை. அவர் தொடக்க வீரராக சோபிக்காவிட்டால், மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவாரே தவிர, அவரை அணியிலிருந்து நீக்க வாய்ப்பில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஏற்கனவே உறுதியளித்துவிட்டார் என்பதால் அணியில் அவரது இடத்துக்கு பாதிப்பில்லை. 

விஹாரி தொடக்க வீரராக இறங்கி 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விஹாரியை ஓபனிங் இறக்கியது சரியான செயல் அல்ல என்று டெஸ்ட் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள லட்சுமணன், ராகுல் ஃபார்மில்லாமல் தவிக்கிறார். பிரித்வி ஷாவும் காயத்தால் விலகிவிட்ட நிலையில், இயல்பாகவே மயன்க் அகர்வால்தான் அடுத்த ஓபனிங் சாய்ஸ். ஆனால் அவருடன் முரளி விஜயை இறக்கிவிட்டிருக்கலாம். இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜய் சரிவிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுந்து நன்றாக ஆடினார். இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துகளை விட்ட விதமும், அவருக்கே உரிய சில டிரைவ் ஷாட்டுகளையும் ஆடியதும் அபாரமாக இருந்தது. எனவே அவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளித்து மயன்க்குடன் தொடக்க வீரராக களமிறக்கியிருக்குவதுதான் சரியாக இருந்திருக்கும். அதை விடுத்து இதுவரை முதல் தர போட்டிகளில் கூட தொடக்க வீரராக களமிறங்காத ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக இறக்கியது சரியான செயல் அல்ல. இது விஹாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி என லட்சுமணன் தெரிவித்தார்.