ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக யாரை களமிறக்க வேண்டும், எந்த 11 வீரர்களை களமிறக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலை அடைந்துள்ளது. எனவே மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் போட்டி. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத இந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு. ஆனால் இந்திய அணி இரண்டாவது போட்டியில் சொதப்பிவிட்டது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சரியாக ஆடாததும், சரியான 11 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்காததுமே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் இரண்டு போட்டிகளிலுமே சொதப்பிவிட்டனர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து டெஸ்ட் தொடர்களிலுமே ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட முரளி விஜய், ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் இடம்பெற்று, மீண்டும் சொதப்பிவிட்டார். முதல் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களில் ஆடி ராகுல் வெறும் 48 ரன்களும் முரளி விஜய் வெறும் 49 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இருவரும் இரண்டு போட்டிகளில் இணைந்து எடுத்த ரன்னே 100ஐ எட்டவில்லை. இவ்வளவு மோசமாக ஆடினால் அது இந்திய அணியின் வெற்றியை மீண்டும் பாதிக்கத்தான் செய்யும். 

எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஜோடியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி. பிரித்வி ஷா காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்றாவது போட்டியில் அவர் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அடுத்த போட்டியில் யாரை தொடக்க வீரர்களாக களமிறக்கலாம் மற்றும் எந்த 11 வீரர்களுடன் களமிறங்கலாம் என்பது குறித்து கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரியை தொடக்க வீரர்களாக களமிறக்கலாம் என்று கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அகர்வால் அறிமுகம் ஆவதும், மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்குடன் அருமையாக ஆடும் ஹனுமா விஹாரியும் ஓபனிங் இறங்குவது அணிக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று கும்ப்ளே கருதுகிறார்.

மேலும் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையுமே அணியில் எடுக்க வேண்டும் என்று கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். 

கும்ப்ளே தேர்வு செய்த 11 வீரர்கள்:

மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.