Asianet News TamilAsianet News Tamil

பவுலிங்ல மட்டுமில்ல.. பேட்டிங்கிலும் நாங்க டீமை காப்பாற்றுவோம்!! 8 விக்கெட்டுக்கு பிறகு கெத்து காட்டிய குல்தீப் - சாஹல்

ஆஸ்டிலின் பந்தில் அபாரமாக ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார் சாஹல். வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்பின்னில் சில கவர் டிரைவ்களையும் சாஹல் அடித்தார். 

kuldeep chahal batted well in fourth odi against new zealand
Author
New Zealand, First Published Jan 31, 2019, 10:06 AM IST

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களுக்கே இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குல்தீப்பும் சாஹலும் இணைந்து நியூசிலாந்து பவுலிங்கை சமாளித்து ஆடினர். ஆனால் அவசரப்பட்டு குல்தீப் அவுட்டானதால் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டாக நேரிட்டது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் காயத்திலிருந்து மீளாத தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ஷமிக்கு பதிலாக கலீல் அகமதுவும் இந்த போட்டியில் ஆடுகின்றனர்.

இந்நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் தவான், 7 ரன்களில் போல்ட்டின் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதையடுத்து ரோஹித்துடன் அறிமுக வீரர் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். 6வது ஓவரில் தவான் ஆட்டமிழக்க, போல்ட் வீசிய 8வது ஓவரில் 13 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். போல்ட்டின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

kuldeep chahal batted well in fourth odi against new zealand

கோலின் டி கிராண்ட்ஹோம் வீசிய 11வது ஓவரில் ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அந்த ஒரே ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தது, இந்திய அணியை நிலைகுலைய செய்தது. பின்னர் போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே கில்லும் ஆட்டமிழந்தார். 

33 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவும் கேதர் ஜாதவும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். எனினும் அதற்கும் போல்ட் அனுமதிக்கவில்லை. கேதர் ஜாதவை போல்ட்டும் பின்னர் புவனேஷ்வர் குமாரை கோலின் டி கிராண்ட்ஹோமும் வீழ்த்தினர். 

40 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. இந்த இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைத்தது. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாத அவர், 16 ரன்களில் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். 

kuldeep chahal batted well in fourth odi against new zealand

8 விக்கெட்டுக்கு பிறகு குல்தீப் - சாஹல் ஜோடி நியூசிலாந்தின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. இருவரும் அவ்வப்போது ஒன்றிரண்டு பவுண்டரிகளையும் அடித்தனர். 9வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 25 ரன்களை சேர்த்தனர். ஆஸ்டிலின் பந்தில் குல்தீப் யாதவ் அவசரப்பட்டு தூக்கியடித்து 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவசரப்படாமல் ஒன்று, இரண்டாக எடுத்திருந்தால் ரன்களை உயர்த்தியிருக்கலாம். 

ஆனால் குல்தீப்பின் விக்கெட்டுக்கு பிறகு கடைசி விக்கெட்டுக்கு சாஹல் நன்றாகவே ஆடினார். ஆஸ்டிலின் பந்தில் அபாரமாக ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார் சாஹல். வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்பின்னில் சில கவர் டிரைவ்களையும் சாஹல் அடித்தார். கடைசி விக்கெட்டாக கலீல் அகமது அவுட்டாக இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாஹல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 18 ரன்கள் எடுத்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios