கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது. சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், கிறிஸ் லின் உள்ளிட்ட 13 வீரர்களை கேகேஆர் தக்கவைத்துள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியலை பார்த்தோம். 

இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம். 

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி விடுவித்துள்ளது. இத்தகவலை முன்னதாகவே மெசேஜ் மூலம் அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. மிட்செல் ஸ்டார்க் தவிர டாம் கரன், மிட்செல் ஜான்சன், வினய் குமார் உள்ளிட்ட வீரர்களையும் கொல்கத்தா அணி விடுவித்துள்ளது. 

அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், கில், நிதிஷ் ராணா, சுனில் நரைன், குல்தீப் உள்ளிட்ட வீரர்களை தக்கவைத்துள்ளது. 

கேகேஆர் அணி விடுவித்த வீரர்கள்:

மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டாம் கரன், கேம்ரோன் டெல்போர்ட், ஜாவோன் சியர்ல்ஸ், இஷாங்க் ஜக்கி, அபூர்வ் வான்கடே, வினய் குமார். 

கேகேஆர் தக்கவைத்த வீரர்கள்:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), உத்தப்பா, கிறிஸ் லின், சுனில் நரைன், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஷுப்மன் கில், ஆண்ட்ரே ரசல், ஷிவம் மாவி, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, நாகர்கோடி, பிரசித் கிருஷ்ணா.