kolkata knight riders register high score in this ipl season
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணியுடன் கொல்கத்தா அணி ஆடிவருகிறது. இந்தூரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக சுனில் நரைனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில், கிறிஸ் லின் அவுட்டானார். அதன்பிறகு நரைனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணியின் பவுலிங்கை பறக்கவிட்டார் நரைன். சுனில் நரைனின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் பஞ்சாப் அணி திணறியது. அஸ்வினும் பவுலர்களை மாற்றி மாற்றி இறக்க, எதுவும் எடுபடவில்லை.
ஆட்டம் கைமீறி போக, 12வது ஓவரில் நரைனையும் உத்தப்பாவையும் அவுட்டாக்கி பிரேக் கொடுத்தார் ஆண்ட்ரூ டை. 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையில் டையின் பவுலிங்கில் வீழ்ந்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், அடுத்த வந்த தினேஷ் கார்த்திக் ரன்ரேட் குறைந்துவிடாமல் அதிரடியை தொடர்ந்தார். அக்ஸர் படேல் வீசிய 15வது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரியும் ரசல் இரண்டு சிக்ஸர்களும் விளாசினர்.
முஜீபுர் ரஹ்மான் வீசிய 16வது ஓவரில் தினேஷ் கார்த்திக் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் விளாசினார். தன் பங்கிற்கு ரசல் ஒரு பவுண்டரி அடிக்க 16 ஓவருக்கே கொல்கத்தா அணி 190 ரன்களை எட்டியது. ஆண்ட்ரூ டை வீசிய 17வது ஓவரில் ரசல் ஆட்டமிழந்தார். 17 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது.
மோஹித் சர்மா வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசிய நிதிஷ் ராணா, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்கு அடுத்த பந்தையே தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார்.
19வது ஓவரை ஆண்ட்ரூ டை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த கில், மூன்றாவது பந்தில் சிங்கிள் தட்டினார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் அடித்த தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். 19 ஓவரின் முடிவில் 229 ரன்கள்.
ஸ்ரான் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். இதையடுத்து இளம் வீரர் ஷுப்மன் கில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார். கடைசி பந்தில் சியர்லஸ் சிக்ஸர் அடித்து இன்னிங்ஸை முடித்தார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி, 245 ரன்கள் குவித்தது. இந்த ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். பஞ்சாப் அணியின் சார்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
246 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. கெய்ல், ராகுல், மில்லர், கருண் நாயர் போன்ற அதிரடி வீரர்களை கொண்டுள்ள பஞ்சாப் அணி, இலக்கை விரட்டுமா என்பதை பார்ப்போம்..
