ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணியின் இன்னிங்ஸை சஞ்சு சாம்சனும், சாம் பில்லிங்ஸும் தொடங்கினர்.

கோல்ட்டர் நைல் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசினார் சாம்சன், உமேஷ் யாதவ் வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை எடுத்தார்.

டெல்லி அணி 6.1 ஓவர்களில் 53 ஓட்டங்களாய் எட்டியபோது சாம் பில்லிங்ஸின் விக்கெட்டை இழந்தது. அவர் 17 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து கோல்ட்டர் நைல் பந்துவீச்சில் அவுட்டானார்.

பின்னர் கருண் நாயர் களமிறங்க, சாம்சன் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் சேர்த்து அவுட்டானார்.

இதனையடுத்து கருண் நாயருடன் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர். இந்த ஜோடி 43 ஓட்டங்கள் எடுத்தது.

ஷ்ரேயஸ் ஐயர் 17 பந்துகளில் 26 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் கருண் நாயர் 27 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கோல்ட்டர் நைல் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அப்போது டெல்லி அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் வந்த ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் வீசிய 16-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசினார். ரிஷப் பந்த், உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் 3 சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 26 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இதனிடையே மேத்யூஸ் 1 ஓட்டத்தில் வெளியேற, ரிஷப் பந்த் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

பின்வரிசையில் கிறிஸ் மோரீஸ் 9 பந்துகளில் 16 ஓட்டங்கள் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.

கொல்கத்தா தரப்பில் கோல்ட்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் டி கிராண்ட்ஹோம் 1 ஓட்டம், ராபின் உத்தப்பா 4 ஓட்டங்கள், கேப்டன் கெளதம் கம்பீர் 14 ஓட்டங்கள் என சொற்ப ஓட்டங்களில் வெளியேற அந்த அணி 2.5 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணி தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மணீஷ் பாண்டே - யூசுப் பதான் இணை அசத்தலாக ஆட, கொல்கத்தா அணி சரிவிலிருந்து மீண்டது.

கம்மின்ஸ் வீசிய 6-ஆவது ஓவரில் பதான் 3 பவுண்டரிகளை விரட்ட, ஆட்டம் சூடுபிடித்தது. அவரைத் தொடர்ந்து பாண்டே சிக்ஸரையும், பவுண்டரியையும் விரட்ட, கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 88 ஓட்டங்களை எட்டியது.

இதன்பிறகு ஜாகீர்கான் வீசிய 14-ஆவது ஓவரில் சிக்ஸரை விளாசி 34 பந்துகளில் அரை சதம் கண்டார் பதான். தொடர்ந்து வேகம் காட்டிய அவர், மோரீஸ் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசிய கையோடு அவரிடமே கேட்ச் ஆனார். அவர் 39 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 72 பந்துகளில் 110 ஓட்டங்கள் குவித்திருந்தது. இதனையடுத்து சூர்யகுமார் களமிறங்க, பாண்டே 37 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதனிடையே சூர்யகுமார் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மிஸ்ரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை வீணடித்த கிறிஸ் வோக்ஸ், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 3 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து வந்த சுநீல் நரேன் 3-ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசிய பாண்டே, அதற்கடுத்த பந்தில் இரண்டு ஓட்டங்களை எடுக்க, கொல்கத்தா 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் கண்டது.

பாண்டே 69 ஓட்டங்கள், சுநீல் நரேன் ஒரு ஓட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில் ஜாகீர்கான், பட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நான்கு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதுவரை இந்த அணி ஐந்து ஆட்டங்களை ஆடியுள்ளது.