இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் குக்கின் கேட்ச்சை கோலி அபாரமாக பிடித்தார். மூன்றாவது ஸ்லிப்பில் அருமையான கேட்ச்சை பிடித்து மிரட்டினார் கோலி. 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மீண்டெழுந்தது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கியது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. ஜென்னிங்ஸ்(0), குக்(17), ஜோ ரூட்(4), ஜானி பேர்ஸ்டோ(6) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 36 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு, கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ்-பட்லர் ஜோடி இம்முறையும் நம்பிக்கையை விதைத்தது. எனினும் அந்த ஜோடி நிலைக்கவில்லை. பட்லரையும் ஸ்டோக்ஸையும் ஷமி வீழ்த்தினார்.

பொறுப்பாக ஆடிய மொயின் அலி 40 ரன்கள் எடுத்தார். முக்கியமான வீரர்கள் அனைவரையும் வீழ்த்தியபோதிலும், இளம் வீரர் சாம் கரண் இந்திய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 136 பந்துகளை எதிர்கொண்டு 78 ரன்களை குவித்தார். 78 ரன்களில் அஷ்வினின் சுழலில் விழுந்தார் சாம் கரண். இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்தது. ஷிகர் தவானும் ராகுலும் களத்தில் இருந்தனர். இன்று அவர்கள் தொடர்ந்து ஆடுவர். 

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில், தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கின் கேட்ச்சை கோலி பிடித்தார். மிகவும் அருமையான கேட்ச் அது. ஹர்திக் பாண்டியா வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் குக் அவுட்டானார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் பிட்ச் பந்தாக வீசினார் ஹர்திக் பாண்டியா. மிகவும் சாதாரண பந்து அது. ஆனால் அதை பாயிண்ட் திசையில் கட் செய்துவிட நினைத்தார் குக். ஆனால், பந்து குக்கின் பேட்டின் மேல்பகுதியில் எட்ஜ் ஆகி, மூன்றாவது ஸ்லிப்பில் நின்ற விராட் கோலியிடம் சென்றது. கோலிக்கு முன்னதாகவே தரையில் பட வேண்டிய பந்து அது. தரையை ஒட்டி வந்த அந்த பந்தை அருமையாக கேட்ச் பிடித்தார் கோலி. மற்ற சில வீரர்களாக இருந்திருந்தால் அந்த கேட்ச்சை பிடித்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்ட கோலி, எந்த வகையிலும் அதற்கான வாய்ப்பை விட்டு கொடுக்காதவர். அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டு விடுவாரா என்ன.? 

கோலி பிடித்த அந்த  கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.