ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலியின் விக்கெட் சர்ச்சைக்குள்ளான நிலையில், தனக்கு அவுட் கொடுத்த விதத்தை கிண்டல் செய்துள்ளார் விராட் கோலி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களையும் இந்திய அணி 283 ரன்களையும் எடுத்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி சதமடித்த விராட் கோலி, 123 ரன்களில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸின் பந்தில் விராட் கோலி அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்ற ஹேண்ட்ஸ்கம்ப் பிடித்தார். ஆனால் அந்த கேட்ச் சர்ச்சையை கிளப்பியது. அது அவுட் கொடுத்த நிலையில், அதை ரிவியூ செய்து பார்த்ததில் பந்து தரையில் பட்டதா இல்லையா என்பதை துல்லியமாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பந்து தரையில் பட்டதை போன்றே தெரிந்தது. அதை கள நடுவரின் முடிவுக்கே மூன்றாவது நடுவர் விட்டுவிட்ட நிலையில், கோலி வெளியேறினார். 

கோலியின் இந்த விக்கெட் சமூக வலைதளங்களில் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கோலி அவுட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் குவிந்தன. இந்நிலையில், தனது சர்ச்சைக்குரிய அவுட்டின்போது ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாட்டை சுட்டிக்காட்டும் வகையில் விராட் கோலி பயிற்சியின் போது நடித்துக்காட்டியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.