வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை விராட் கோலி முறியடிக்க காத்திருக்கிறார். 

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக திகழும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். பேட்டிங்கில் இருக்கும் ஒவ்வொரு சாதனையாக முறியடித்துவருகிறார். பெரும்பாலும் போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை முறியடிக்கிறார் கோலி. 

ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என்றும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை முறியடித்து வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்களா ஆகிய சாதனைகளை விராட் கோலி, அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவதற்குள் கண்டிப்பாக முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடிக்கும் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சாதனை படைக்க காத்திருக்கிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வென்றது. 

இதையடுத்து இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை கோலி முந்த உள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிகமான ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர்  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1,573 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். கோலி 27 ஒருநாள் போட்டிகளில் 1,387 ரன்கள் சேர்த்துள்ளார்.

சச்சினின் சாதனையை எட்டிப்பிடிக்க கோலிக்கு இன்னும் 186 ரன்கள் மட்டுமே தேவை என்பதால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த ரன்களை எடுத்து சச்சினை முந்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1,348 ரன்களுடன் ராகுல் டிராவிட் மூன்றாமிடத்திலும் 1,142 ரன்களுடன் கங்குலி நான்காமிடத்திலும் உள்ளனர்.