ஐசிசி கனவு ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேரந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதேசமயம் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வீரர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஐசிசி கனவு அணி வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான கனவு அணிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோலி தலைமையிலான ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இந்தியாவின் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து டிவில்லியர்ஸ், விக்கெட் கீப்பர் டி காக், காகிசோ ரபாடா, சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகிய 3 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் பட்லரும், மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுநீல் நரேனும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து போன்ற முன்னணி அணிகளைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.

அதேநேரத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. அவர், தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை தோற்காமல் வழி நடத்தியதோடு, சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 655 ஓட்டங்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் கிரிக்கெட் அணி: விராட் கோலி (கேப்டன்), டேவிட் வார்னர், டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ், ஜோஸ் பட்லர், மிட்செல் மார்ஷ், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், காகிசோ ரபாடா, சுநீல் நரேன், இம்ரான் தாஹிர்.