ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். 

இது கோலியின் 63வது சர்வதேச சதமாகும். இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் கோலி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் 71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், 63 சதங்களுடன் மூன்றாமிடத்தை சங்கக்கராவுடன் பகிர்ந்துள்ளார் கோலி.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனுக்கு அடுத்து விரைவில் 25 டெஸ்ட் சதங்களை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை கோலி நிகழ்த்தியுள்ளார். பிராட்மேன் 68 இன்னிங்ஸ்களில் 25 சதங்களை விளாசினார். கோலி 127 இன்னிங்ஸ்களில் 25 சதங்களை விளாசியுள்ளார். 130 இன்னிங்ஸ்களில் 25 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சச்சின் டெண்டுல்கர் மூன்றாமிடத்திலும் 138 இன்னிங்ஸ்களில் 25 சதங்களை பூர்த்தி செய்த கவாஸ்கர் நான்காமிடத்திலும் உள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 7 சதங்களுடன் சச்சின், கவாஸ்கருக்கு அடுத்து மூன்றாமிடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. 

மேலும் ஒரு கேப்டனாக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 18 சதங்களுடன் விராட் கோலி மூன்றாமிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 25 சதங்களுடன் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் முதலிடத்திலும் 19 சதங்களுடன் பாண்டிங் இரண்டாமிடத்திலும் உள்ளனர். பாண்டிங்கை முந்த கோலிக்கு இன்னும் 2 சதங்கள் மட்டுமே தேவை என்பதால் விரைவில் பாண்டிங்கை முந்தி விடுவார்.