ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓர் இடத்தை இழந்து 3-ஆவது இடத்தையும், முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஓர் இடம் முன்னேறி 13-ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 232 ஓட்டங்கள் குவித்த கேதார் ஜாதவ் 57 இடங்கள் முன்னேறி 47-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் 3 இடங்களை இழந்து 12-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஷிகர் தவன், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லருடன் 14-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 367 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர், தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 அரை சதங்களை விளாசிய இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் 23 இடங்கள் முன்னேறி 17-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர், முதல் இருபது இடங்களுக்குள் முன்னேறுவது இதுவே முதல்முறை.
