சச்சின் டெண்டுல்கரின் எந்த சாதனையை கோலி முறியடித்தாலும், அவர் செய்த ஒரு சம்பவத்தை மட்டும் கோலி செய்ய வாய்ப்பே இல்லை. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நல்ல ஃபார்மில் இருக்கும் கோலி அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். ரன் வேட்கையுடன் ஆடிவருகிறார். சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். 664(டெஸ்ட், ஒருநாள், டி20) சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களை சச்சின் விளாசியுள்ளார். விராட் கோலி 344 சர்வதேச போட்டிகளில் ஆடி 58 சதங்களை விளாசியுள்ளார். கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் சச்சினின் இந்த சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல சச்சின் டெண்டுல்கரின் அதிகமான சர்வதேச ரன்கள் என்ற சாதனையையும் கோலி முறியடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் சச்சின் செய்த ஒரு சம்பவத்தை விராட் கோலியால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் செய்யவே முடியாது. 

ஒரு ஒருநாள் போட்டியில் சதமும் அடித்து, 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார் சச்சின். ஒரே போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சச்சின் மிரட்டியுள்ளார். பேட்டிங் மட்டுமே ஆடும் கோலியால் இந்த சம்பவத்தை செய்ய முடியாது. 

1998ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் கங்குலி, அசாருதீன் ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே அவுட்டாகிவிட, அதன்பிறகு டிராவிட் மற்றும் அஜய் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார் சச்சின். அந்த போட்டியில் 128 பந்துகளில் 141 ரன்களை குவித்து இந்திய அணி 307 ரன்களை குவிக்க காரணமாக திகழ்ந்தார். 

மேலும் பவுலிங்கிலும் மிரட்டிய சச்சின் டெண்டுல்கர், 9.1 ஓவர்கள் வீசி 38 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.