இந்தியாவிற்கு வெளியே டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்ததில் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி கே.எல்.ராகுல் முதலிடம் பிடித்துள்ளார். 

இந்தியாவிற்கு வெளியே டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்ததில் ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளி கே.எல்.ராகுல் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. இந்த தொடர் முழுவதுமே ஸ்லிப் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ராகுல், நேற்றைய ஆட்டத்தில், இரண்டு கேட்ச்களை பிடித்தார். அதன்மூலம், இந்தியாவிற்கு வெளியே ஆடிய டெஸ்ட் தொடரில் ஒரே தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய ஃபீல்டர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 கேட்ச்களை பிடித்த ராகுல், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். நேற்று மொயின் அலிக்கு அவர் பிடித்த கேட்ச், இந்த தொடரில் அவர் பிடித்த 11வது கேட்ச். இதன்மூலம் இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் 10 கேட்ச்களை பிடித்திருந்த அஜித் வடேகர், ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் ராகுல்.

ஆனால் பொதுவாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் 13 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் தான் முதலிடத்தில் உள்ளார். 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 13 கேட்ச்களை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளதால், ராகுல் டிராவிட்டின் அந்த சாதனையையும் கே.எல்.ராகுல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.