ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தனது முதல் விக்கெட் வீழ்த்துவதற்கு தோனி காரணமாக இருந்தது குறித்து விளக்கியுள்ளார். 

ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி ஹாங்காங்குடன் மோதியது. இந்த போட்டியில் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அறிமுகமானார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 285 ரன்கள் எடுத்தது. 

286 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி அபாரமாக ஆடியது. யாருமே எதிர்பாராத அளவிற்கு சிறப்பாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை சேர்த்தனர். 34 ஓவர்கள் வரை முதல் விக்கெட்டை இந்திய அணியால் வீழ்த்த முடியவில்லை. 35வது ஓவரின் முதல் பந்தில் அன்ஷுமான் ராத்தை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கலீல் அகமது. அதுதான் அவரது முதல் சர்வதேச விக்கெட். அதன்பிறகு மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹாங்காங் அணி 50 ஓவர் முடிவில் 259 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இந்நிலையில், அந்த போட்டியில் முதலில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய கலீல் அகமது, தோனி கூறிய ஆலோசனைக்கு பிறகு விக்கெட் எடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய கலீல் அகமது, ஹாங்காங்கிற்கு எதிராக நான் நன்றாக பந்துவீசினாலும் எனது பவுலிங்கை அடித்து ஆடினர். என்னால் விக்கெட்டும் வீழ்த்த முடியவில்லை. உடனே என்னிடம் வந்த தோனி, நல்ல வேகமாகத்தான் வீசுகிறீர்கள். ஆனால் அதே வேகத்துடன் சற்று முன்னே வந்து வீசுங்கள் என்றார். அதை பின்பற்றினேன்; விக்கெட்டுகள் வீழ்ந்தன என கலீல் அகமது தெரிவித்துள்ளார்.