மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா ஆகிய இருவரும் அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான டொமினிகா சிபுல்கோவா 6-3, 7-6 (5) என்ற நேர் செட்களில் 4-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார். டபிள்யூடிஏ பைனல்ஸில் சிபுல்கோவா பெற்ற முதல் வெற்றி இதுதான்.

அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றதால் நாக் அவுட் சுற்றான அரையிறுதி வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினார் ஹேலப்.

சிபுல்கோவா அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான ஏஞ்ஜெலிக் கெர்பர் - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேர்ந்தது.

அந்த ஆட்டத்தில் எதிர்பார்த்ததைப் போலவே கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் மேடிசன் கீஸை வீழ்த்த, சிபுல்கோவாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.

ஒருவேளை கெர்பருக்கு எதிராக மேடிசன் ஒரு செட்டை கைப்பற்றியிருந்தால்கூட அவர் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பார். சிபுல்கோவா வெளியேற நேர்ந்திருக்கும்.
ஏற்கெனவே ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டார்.

தற்போதைய நிலையில் அரையிறுதியில் விளையாடும் 3 வீராங்கனைகள் உறுதி செய்யப்பட்டுவிட்டனர்.

ஓர் அரையிறுதியில் சிபுல்கோவாவும், ஸ்வெட்லானாவும் மோதவுள்ளனர். மற்றொரு அரையிறுதியில் கெர்பருடன் மோதுவது யார் என்பது வெள்ளிக்கிழமை தெரியவரும்.

நடப்பு சாம்பியனான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா, அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான செக்.குடிரசின் கரோலினா பிளிஸ்கோவா இடையிலான கடைசிச் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அதில் வெல்பவர், அரையிறுதியில் கெர்பரை சந்திப்பார்.