இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் எஃப்சி கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி வெற்றி பெற்றது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கொச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருவிருப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு கோவா அணிக்கு கிடைத்தது.
ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேயே கோவா அணியின் ரஃபேல் லூயிஸ் கோல் அடித்தார். சக வீரர் ஃபிலிஸ்பினோ, ஃப்ரீ கிக் மூலம் அடித்த பந்தை தலையால் முட்டி அற்புதமாக அவர் அதை கோலாக்கினார்.
இதையடுத்து, தனது கோல் கணக்கை தொடங்க கேரளா முயற்சித்தபோதும் ஆட்டத்தின் பாதி நேரம் வரையில் அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என முன்னிலை வகித்தது. எனினும், 2-ஆவது பாதியில் ஆட்டம் தலைகீழானது. கேரள அணியின் பெல்ஃபோர்ட், 48-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். இதனால் ஆட்டம் சமனானது.
வெற்றிக்கான கோலுக்காக இரு அணி வீரர்களுமே கடுமையாகப் போராடினர். ஆட்டம் நிறைவடைய இருந்த 90-ஆவது நிமிடத்தில் கேரள அணி தனக்கான கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது. சக வீரர் ஹெங்பர்டின் உதவியுடன் கேரள வீரர் வினீத் கோல் அடித்தார். இதையடுத்து கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
