கேதர் ஜாதவ் பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு பவுலிங்கிலும் அசத்திவருகிறார். பாகிஸ்தானிடம் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கேதர் ஜாதவ், தனக்கு பந்துவீச வாய்ப்பளித்து தனது வாழ்க்கையை மாற்றியது தோனி தான் என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கங்குலி மற்றும் தோனி ஆகிய இருவரும் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பளிப்பதில் வல்லவர்கள். சேவாக், தோனி போன்ற வீரர்களை முன்வரிசையில் களமிறக்கி அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவியர் கங்குலி.

கங்குலி தனக்கு செய்ததை தோனி, அவர் கேப்டனான பிறகு பல வீரர்களுக்கு செய்தார். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவந்த ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கியது, கோலியை மூன்றாம் வரிசையில் களமிறக்கிவிட்டது என தோனியும் பல திறமையான வீரர்களை அவர்களது திறமையை வெளிக்கொண்டுவர தேவையான வாய்ப்புகளை வழங்கினார். 

அப்படி தனக்கு தோனி வழங்கிய வாய்ப்பை பற்றித்தான் கேதர் ஜாதவ் நெகிழ்ந்து கூறியுள்ளார். 33 வயதான கேதர் ஜாதவ், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரராக திகழ்ந்துவருகிறார். இவர் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்படுவதால் பார்ட் டைம் பவுலராக பயன்படுத்தப்படுகிறார். ஆனால் இவர் போகிறபோக்கில் முழுநேர ஸ்பின்னராக ஆகிவிடுவாரோ என்ற ஐயம் எழும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இவர் பந்துவீசும் முறையே பேட்ஸ்மேன்களை குழப்பிவிடும். 

வெவ்வேறு விதமான ஸ்டைல்களில் பந்துவீசுகிறார். நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கேதர் ஜாதவ். மூன்றும் முக்கியமான விக்கெட்டுகள். 

பாகிஸ்தானுக்கு எதிராக பவுலிங்கில் அசத்திய கேதர் ஜாதவ், தனக்கு தோனி பவுலிங் வீச அளித்த வாய்ப்பு குறித்து கூறி நெகிழ்ந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய கேதர் ஜாதவ், தோனி என்னை பந்து வீச்சாளராக அறிமுகப்படுத்திய பின்னர் என்னுடைய வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. பயிற்சியின் போது நான் அதிக பந்துவீச மாட்டேன். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் பயிற்சியின் போது சில ஓவர்கள் மட்டுமே பந்துவீசி பயிற்சி எடுப்பேன். பந்துவீச்சாளராக ஆக வேண்டும் என நினைத்து அதிகம் பயிற்சி செய்தால் இருக்கும் திறமையும் குறைந்துவிடும் என்று நினைத்தேன். சரியாக கணித்து பந்துவீசினால், நல்ல பலன் தானாக கிடைக்கும். ஸ்டம்பை குறி வைத்தே நான் பந்து வீசுவேன். பேட்ஸ்மேன் கணித்து அடித்தால் ரன் கிடைக்கும். இல்லையென்றால் நிச்சயம் விக்கெட் தான் என்று கேதர் கூறியுள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 2016ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் முதன்முறையாக கேதர் ஜாதவை பந்துவீச வைத்தார் தோனி.