அரசியல், எழுத்து, இலக்கியம், வசனகர்த்தா என பல துறைகளில் சிறந்து விளங்கிய கருணாநிதி, கிரிக்கெட்டின் மிகத்தீவிரமான ரசிகர். அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனிக்கும் கருணாநிதி ரசிகர் ஆவார். 

கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் 8ம் தேதி மாலை மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இரங்கல் தெரிவித்தனர். கருணாநிதியின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் சேவாக், அஷ்வின், தினேஷ் கார்த்திக், ரெய்னா, முரளி விஜய் உள்ளிட்டோரும் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.

கருணாநிதியின் அரசியல், எழுத்து திறமைகள் குறித்து பலரும் கருத்து பகிர்ந்தனர்; கருணாநிதியை புகழ்ந்தனர். கருணாநிதி விளையாட்டின் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். அதிலும் தீவிர கிரிக்கெட் ரசிகர். கபில் தேவ், சச்சின், தோனி ஆகியோரை கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும். தோனி ஆடிய பல ஆட்டங்களை பார்ப்பதற்காக தனது சொந்த வேலைகளையும் ரத்து செய்துவிட்டு மேட்ச் பார்த்திருக்கிறார் கருணாநிதி. பொதுக்கூட்டங்களிலோ நிகழ்ச்சிகளிலோ இருந்தால் கூட, அப்போது கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தால், இடையிடையே ஸ்கோரையும் கேட்டுக்கொள்வாராம் கருணாநிதி. 

சச்சினின் பிளேயிங் இட் மை வே என்ற புத்தகத்தை 2014ல் படித்துவிட்டு சச்சினை தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். இவ்வாறு கிரிக்கெட்டின் ரசிகராக திகழ்ந்த கருணாநிதி குறித்து சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கருணாநிதியின் ஆளுமை அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் விளையாட்டின் மீது தீராத காதல் கொண்டவர் என்ற உண்மை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்காது. விளையாட்டுகளுக்கு அதிக ஆதரவு அளித்தார். கிரிக்கெட்டை மிகவும் நேசித்தார். கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் கருணாநிதி. 

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தீவிர ரசிகராக இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சில போட்டிகளை நேரில் வந்து பார்த்து ஆதரவளித்துள்ளார். சிஎஸ்கே தோற்றுவிட்டால் வருத்தமடைவார் என ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.