இந்திய அணி உருவாக்கியதில் மிகச்சிறந்த வீரர் தோனி என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி. இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் முக்கியமானவர் தோனி.

தனது கூலான மற்றும் சமயோசித கேப்டன்சியால் மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்தவர். இளம் வீரர்களை இனம் கண்டு உருவாக்குவதிலும் வீரர்களை கையாள்வதிலும் கைதேர்ந்தவர். கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஒதுங்கிய தோனி, அடுத்த கேப்டனின் தலைமையில் இளம் அணி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

இன்னும் 6 மாதத்தில் உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், அண்மைக்காலமாக தோனி ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். அதனால் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்திய அணி உருவாக்கியதில் மிகச்சிறந்த வீரர் தோனி. 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய தோனி, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது நலனை விட நாட்டு நலனில் அக்கறை கொண்டதற்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆஃப் என்று கபில் தேவ் புகழாரம் சூட்டினார்.