இந்திய மகளிர் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் ரமேஷ் பவார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி மகளிர் டி20 உலக கோப்பையின் அரையிறுதிவரை முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. அந்த போட்டியில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மிதாலி ராஜும் ரமேஷ் பவாரும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை ரமேஷ் பவார் முடித்து வைக்க நினைப்பதாக மிதாலி ராஜ் தெரிவித்தார். இதுகுறித்து இருவரிடமும் பிசிசிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது. 

பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். 

இந்திய  மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யுமாறு சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிடம் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டது. ஆனால் நிர்வாகக்குழுவின் கோரிக்கையை கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான குழு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்த உள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கும் மனோஜ் பிரபாகருக்கும் கபில் தேவுக்கும் ஆகாது. இருவருக்கும் இடையே பழைய பகை உள்ளது. 

அசாருதீன், அஜய் ஜடேஜா மீது சூதாட்டப் புகார் எழுந்தபோது, அதுகுறித்து கபில் தேவுக்கும் தெரியும் என்று அவரது பெயரை இழுத்துவிட்டவர் மனோஜ் பிரபாகர். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ், இந்த குற்றச்சாட்டை கண்ணீர் மல்க மறுத்துவிட்டு பதவியிலிருந்து விலகினார். 

அந்த பிரச்னையில் கபில் தேவுக்கும் மனோஜ் பிரபாகருக்கும் இடையே வெடித்த மோதல் அனைவரும் அறிந்தது. இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து மனோஜ் பிரபாகரை நேர்காணல் நடத்தும் நிலை கபில் தேவுக்கு உருவாகியுள்ளது. பழைய பகையை மனதில் வைத்து கபில் தேவ் செயல்படுவாரா அல்லது மனோஜ் பிரபாகரை தேர்வு செய்வாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.