புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவர் கபடிப் போட்டியில் பங்கேற்ற 65 அணிகளில், அரியலூர் மாவட்ட அணி சாம்பியன் வென்றது.

வெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (பிப். 22) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கோயில் திடலில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில், புதுச்சேரி, கன்னியாகுமரி, நாகர்கோவில், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல், விருதுநகர், சேலம், காஞ்சிபுரம், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 65 அணியினர் பங்கேற்றனர்.

போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்றன.

இதில், அரியலூர் மாவட்டம், வென்னங்குடி அணி முதலிடத்தைப் பிடித்து கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றது.

இரண்டாவது இடம்பிடித்த நாகப்பட்டினம் அணிக்கு ரூ.40 ஆயிரமும்,

மூன்றாவது இடத்தைப் பிடித்த சேலம் சாமி பிரதர்ஸ் அணிக்கு ரூ.30 ஆயிரமும்,

நான்காவது இடம்பிடித்த சேலம் முருகன் பிரதர்ஸ் அணிக்கு ரூ.20 ஆயிரமும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், வெள்ளனூர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.