மாநில அளவிலான தடகளப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தின.

மாநில அளவிலான 32-ஆவது தடகளப் போட்டிகள், மதுரை மாவட்ட தடகள சங்கம் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.

மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்ட தடகள வீரர்களும் பங்கேற்றனர்.

இரு பாலர்களுக்கும் ஓட்டப்பந்தயம், நடைப்பயிற்சி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கம்பு ஊன்றித் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், 800 மீட்டர், 400 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்தப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்ட தடகள அணி 407 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், சென்னை தடகள அணி 327 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்தன.

இதையடுத்து நேற்று நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, மதுரை மாவட்ட தடகள சங்கத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலர் உஸ்மான்அலி முன்னிலை வகித்தார்.

இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.