விராட் கோலி சச்சினின் சாதனைகள் உட்பட அனைத்து கிரிக்கெட் சாதனைகளையும் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சமகால சர்வதேச கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக விராட் கோலி திகழ்ந்துவருகிறார். போட்டிக்கு போட்டி சாதனைகளை நிகழ்த்திவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

100 சர்வதேச சதங்களுடன் அதிக சதங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 58 சதங்களுடன் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் விராட் கோலி. 343 போட்டிகளில் ஆடியுள்ள கோலி 58 சதங்களை விளாசியுள்ளார். 

இந்த சாதனையையும், சச்சினின் அதிக ரன்கள் சாதனையும் கோலி முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை கோலி நிகழ்த்திவருகிறார். ரன் மெஷின் கோலி ரன்களை குவிப்பதை எந்த அணியாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். நல்ல ஃபார்மில் உள்ளார். இங்கிலாந்திலும் சிறப்பாக ஆடிவருகிறார். 

இந்நிலையில், மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேட்டியளித்த போது, சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்விக்கு கைஃப் பதிலளித்தார். 

விராட் கோலி குறித்து பேசிய கைஃப், கண்டிப்பாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து விடுவார் என்று நினைக்கிறேன். விராட் கோலி நல்ல ஃபார்மில் உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனால் இம்முறை சிறப்பாக ஆடிவருகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என இந்தியாவிற்கு வெளியே அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். சீமிங், ஸ்விங் கண்டிஷன்களிலும் சிறப்பாக ஆடுகிறார். சாதனைகள் என்று பார்க்கையில், சச்சினின் சாதனை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து சாதனைகளையுமே கோலி முறியடித்துவிடுவார் என கைஃப் நம்பிக்கை தெரிவித்தார். 

ஒரு கேப்டனாக அவர் மீது இருக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் அப்பாற்பட்டு அவர் பேட்டிங்கில் ஜொலிப்பது வியப்பை ஏற்படுத்துவதாக கைஃப் தெரிவித்தார். 

மேலும், அந்நியன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விக்ரமை பார்த்து, பிரகாஷ் ராஜ் ஒரு வசனம் பேசுவார். நானும் எம்ஜிஆரை பாத்துருக்கேன், சிவாஜியை பாத்துருக்கேன், ரஜினியை பாத்துருக்கேன், கமலை பாத்துருக்கேன், ஆனால் உன்னைய மாதிரி ஒரு நடிகனை பார்த்தது இல்லடா என்று வசனம் பேசுவார். இதே பாணியில் கைஃப் ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது, நான் சச்சின் பேட்டிங் ஆடி பார்த்துருக்கேன், டிராவிட் பேட்டிங் ஆடி பார்த்துருக்கேன், கோலி மாதிரி ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் பேட்ஸ்மேன் யாருமே கிடையாது என்று தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 60 ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். ரன்கள் குவிப்பதோ சதங்களை விளாசுவதோ பரவாயில்லை. இதுபோன்று ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பது மிகவும் பெரிய விஷயம் என்று கோலியை வியந்து பாராட்டினார் கைஃப்.