Jokovic left the 2017 season due to injury in the elbow ....
உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2017 சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதினார் ஜோகோவிச்.
அப்போது ஜோகோவிச்சுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் அந்தப் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகினார்.
இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியிருப்பதால் அமெரிக்க ஓபன், டேவிஸ் கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியாது.
பெல்கிரேடில் இருக்கும் ஜோகோவிச் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், “இந்த தருணத்தில் துரதிருஷ்டவசமாக கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. விம்பிள்டன் போட்டி இந்த முறை எனக்கு கடினமானதாக அமைந்தது. எனது முழங்கை காயம் குறித்து பல்வேறு மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். அவர்கள் அனைவருமே எனக்கு ஓய்வு தேவை என கூறிவிட்டனர்.
சில காயத்தை உடனடியாக குணப்படுத்த முடியாது. அதில் முழங்கை காயமும் ஒன்று. அதற்கு சிகிச்சை பெற்றாலும், அது இயல்பாகவே குணமடைய வேண்டும். ஆனால் தொழில்முறை விளையாட்டில் இருந்துகொண்டு நீண்ட நாள்கள் ஓய்வில் இருப்பது என்பது கடினமானதாகும்” என கூறினார்.
