ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் உள்ளது இந்திய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடிவருவதால் போட்டி உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்தாலும் ஆஸ்திரேலிய அணியும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காமல் போராடிவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்களையும் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களையும் எடுத்தது. 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்ததால் 322 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து 323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோரின் விக்கெட்டுகள் நான்காம் நாளில் வீழ்த்தப்பட்டுவிட்டன. எனினும் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தை டிராவிஸ் ஹெட்டும் ஷான் மார்ஷும் நின்று முடித்துவிட்டனர். 

கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிராவிஸ் ஹெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அரைசதம் அடித்த ஷான் மார்ஷை 60 ரன்களில் பும்ரா வெளியேற்றினார். களத்தில் நிலைத்த ஷான் மார்ஷை வீழ்த்தியதோடு, அவருக்கு அடுத்து சிறப்பாக ஆடிவந்த அந்த அணியின் கேப்டன் டிம் பெய்னையும் பும்ரா வீழ்த்தினார். 41 ரன்கள் அடித்த டிம் பெய்னை அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. 

இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தட்டுத்தடுமாறி, ஆனால் விக்கெட்டை பறிகொடுத்துவிடாமல் ரன்களை சேர்த்தனர். தன் பங்கிற்கு 28 ரன்கள் அடித்த ஸ்டார்க்கை ஷமி வீழ்த்தினார். பின்னர் கம்மின்ஸுடன் ஜோடி சேர்ந்து நாதன் லயன் சிறப்பாக ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். 

8 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 9வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடியது. இந்த ஜோடி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த நிலையில், கம்மின்ஸை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றுள்ளார் பும்ரா. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை என்பதால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.