ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் கால்பந்து கிளப்புகள் அமைக்க தலா ரூ.50 இலட்சம் ஒதுக்கப்படும் என்று மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இம்ரான் அன்சாரி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநில விளையாட்டு குழுவின் 132-வது நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இம்ரான் அன்சாரி பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியது:

“ஜம்மு - காஷ்மீரில் விளையாட்டுத் தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், இங்குள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் கால்பந்து கிளப்புகள் அமைப்பதற்காக, அவற்றுக்கு தலா ரூ.50 இலட்சம் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை பெண்களும் அணுக வசதியாக, வாரத்தில் இரு நாள்கள் அவர்களுக்காக மட்டுமே அவற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மேம்பட்ட பயிற்சி கிடைப்பதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களை மாநிலத்தின் நலனுக்காக முறைப்படுத்துவதற்கு விளையாட்டு ஒரு முக்கிய கருவியாகும்.

சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை நிரூபித்துள்ளனர்.

விளையாட்டு குறித்த தகவல்களை விரைவாகப் பெற மாநில விளையாட்டு கவுன்சிலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.