இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை பெற்ற ரவீந்திர ஜடேஜா, தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்ற நிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் சேர்க்கப்பட்டனர்.

அஷ்வின் காயம் காரணமாக ஆட முடியாததால், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றார் ஜடேஜா. முதல் நாள் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ஜடேஜா. வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஸ்பின் பவுலரை மட்டுமே இந்திய அணி பயன்படுத்தி வருவதால், ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அஷ்வின் காயத்தால் ஜடேஜாவிற்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 

ஏற்கனவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதில்லை. குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அணியில் இணைந்து சிறப்பாக செயல்பட்டதால், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் ஜடேஜா. 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்து ஆடிவரும் ஜடேஜா, கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடி, அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பெற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஆடினால் மீண்டும் அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரே ஒரு விதமான கிரிக்கெட்டில் மட்டுமே ஆடுவது என்பது சற்று கடினமான விஷயம். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட வேண்டியிருக்கும். அது கடினம். அதே அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும்போது, தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைப்பதால் சிறப்பாக செயல்படமுடியும் என ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஆனால், குல்தீப்பும் சாஹலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் காலூன்றி விட்டனர். கேப்டன் கோலியும் சாஹலுக்கும் குல்தீப்பிற்குமே முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். எனவே ஜடேஜாவும் அஷ்வினும் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவது கடினம்தான்.